அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதல்

by Staff Writer 08-01-2020 | 8:24 AM
Colombo (News 1st) ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் இரண்டின் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் கூட்டு இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த அல் அஸாட் (Al Asad) மற்றும் இர்பில் (Irbil) விமானத் தளங்கள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள், மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. எவ்வாறாயினும், ஈரானிய புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சொலைமானி (Qasem Soleimani) கொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரானின் அரச தொலைக்காட்சி செய்தி வௌியிட்டுள்ளது. நிலைமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி கண்காணித்து வருவதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதேவேளை, தாக்குதல் நடத்தப்பட்டு சிறிது நேரத்தில் ஈரானின் சிரேஷ்ட அரசியல் தலைவரான சயீட் ஜலில் ஈரானின் தேசிய கொடியின் நிழற்படத்தை தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட ஈரானிய புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சொலைமானியின் இறுதிக் கிரியைகள் நேற்று நடைபெற்றதை தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காசெம் சொலைமானி கொலை செய்யப்பட்டமைக்குத் தக்க பதிலடி வழங்கப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.