இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா​ வெற்றி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி

by Staff Writer 08-01-2020 | 7:52 AM
Colombo (News 1st) துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் தோல்வியடைந்தமைக்கான காரணம் என இலங்கை அணியின் பயிற்றுநரான மிக்கி ஆர்த்தர் கூறியுள்ளார். போட்டியின் நிறைவுக்கு பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இந்தோரில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக குசல் ஜனித் பெரேரா 35 ஓட்டங்களை பெற்றார். சர்துல் தாகூர் 3 விக்கெட்களை கைப்பற்ற குல்தீப் யாதவ், நவ்தீப் சய்னி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வெற்றி இலக்கை இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு கடந்தது. இந்தியா சார்பாக லோகேஷ் ராகுல் 45 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 32 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் போது இலங்கை அணியின் சகலதுறை வீரரான இசுரு உதான உபாதைக்குள்ளானார். ஷ்ரேயாஸ் ஐயர் 34 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தார்.
வெற்றியீட்டக்கூடிய அளவுக்கு நாம் ஓட்டங்களை குவிக்கவில்லை. அதுவே தோல்விக்கான காரணமாக அமைந்தது. எமது பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயற்படவில்லை. போட்டியின் போது மேலும் 20 அல்லது 25 ஓட்டங்களை மேலதிகமாக பெற்றிருக்கும் பட்சத்தில் எம்மால் இந்தியாவுக்கு சவால் விடுத்திருக்க முடியும்
என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்க ஆர்த்தர் இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.
நான் ஓட்டங்களை கட்டுப்படுத்த முயற்சித்தேன். அதனை சிறப்பாக என்னால் செய்ய முடிந்தது. குறைந்த ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினேன். அதனால் இலங்கை அணியை குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது
என இந்திய அணி பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் கூறியுள்ளார். முதல் போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்ட நிலையில் தொடரில் 1 - 0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. எனவே நாளை மறுதினம் புனேயில் நடைபெறவுள்ள மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் வெற்றியீட்ட வேண்டிய கட்டாயம் இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது.