பசறை பஸ் விபத்து தொடர்பில் விசேட விசாரணை

பசறை பஸ் விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

by Staff Writer 07-01-2020 | 7:01 AM
Colombo (News 1st) பதுளை - பசறை, மடுல்சீமை பிரதான வீதியின் 6ஆம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த 40 இற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் 4 பெண்கள் அடங்களாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுள் பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சிலர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பசறை- மடூல்சீமை 6ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா இழப்பீடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதேநேரம், இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக விசேட குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பசறை - மடூல்சீமை வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. விசேட பொறியியலாளர்கள் குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் C.H.R.T. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொது முகாமையாளர் கூறினார்.