by Staff Writer 07-01-2020 | 5:35 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகாமம், பனிச்சங்குளம், இழவன்குளம், கொக்காவில், வன்னிவிலாங்குளம் மற்றும் வடகாடு பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கடந்த மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட 13 உழவு இயந்திரங்களும் 2 டிப்பர்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 15 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் எதிர்வரும் (9) ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - குடத்தனை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடத்தனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது நேற்று (06) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் இயந்திரத்தின் உரிமையாளர் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குடத்தனை பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.