by Staff Writer 07-01-2020 | 8:18 AM
Colombo (News 1s) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி இன்று (07) நடைபெறவுள்ளது.
இந்தோரில் நடைபெறவுள்ள போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தோர் மைதானத்தில் இலங்கையும் இந்தியாவும் மோதவுள்ள இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி இதுவாக அமையவுள்ளது.
அதன்படி இரு அணிகளும் இறுதியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விளையாடியிருந்ததுடன், அந்தப்போட்டியில் இந்தியா 88 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தது.
இந்தோர் மைதானத்தில் இதுவரையில் இந்தியா எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையவில்லை என்பது சிறப்பம்சமாகும்.
முதல் போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டது.
இந்திய மண்ணில், இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி இதுவரையில் எந்தவொரு இருபதுக்கு 20 தொடரையும் கைப்பற்றியதில்லை.
இந்நிலையில், முதல் தொடர் வெற்றியை இந்திய மண்ணில் பதிவுசெய்யும் முயற்சியுடன் இலங்கை அணி இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
லசித் மாலிங்கவின் தலைமையில் இலங்கை அணி இறுதியாக விளையாடியுள்ள 9 இருபதுக்கு 20 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதுடன் ஒரு போட்டியில் மாத்திரமே வென்றுள்ளது.
முதல் போட்டிக்கான இந்திய குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த சர்துல் தாகூருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.