அமெரிக்க படையினரை பயங்கரவாதிகள் என ஈரான் அறிவிப்பு

அமெரிக்க படைவீரர்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது ஈரான்

by Bella Dalima 07-01-2020 | 4:31 PM
Colombo (News 1st) ஈரான் இராணுவத் தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க படைவீரர்கள் அனைவரையும் ஈரான் அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே அணு ஆயுத தவிர்ப்பு விவகாரம், யுரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை (3) அமெரிக்கா நடத்திய வான்வழித்தாக்குதலில் ஈரானின் இரண்டாவது சக்திவாய்ந்த மனிதரான இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை பழி தீர்ப்போம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் நிலவுகின்றது. இந்நிலையில், ஈரான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டதை அடுத்து, அனைத்து அமெரிக்க படைகள் மற்றும் இராணுவ ஊழியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவிக்கும் சட்டமூலம் இன்று ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்வதாகவும் ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிறநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ர‌ஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின. அணுசக்தி ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்க வேண்டும். அதற்கு பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதாரத் தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப்பெற வேண்டும். ஈரானுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்தாண்டு அறிவித்தார். மேலும், ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் வெடித்தது. அதனை தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை புறக்கணிப்பதாக ஈரான் படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி அணுசக்தி ஒப்பந்தத்தின் 5 நிபந்தனைகளில் 4 நிபந்தனைகளை ஈரான் நிராகரித்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க இராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் வலுவடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது.