அமெரிக்க ஈரான் மோதல் இலங்கையை பாதிக்குமா?

அமெரிக்க ஈரான் மோதல் இலங்கையை பாதிக்குமா?

by Staff Writer 07-01-2020 | 8:52 PM
Colombo (News 1st)  ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி உக்கிரமடைந்துள்ளது. அமெரிக்கா பாரிய 6 விமானங்களை இந்து சமுத்திரத்தில் உள்ள தியேகோ கார்சியா (Diego Garcia) தீவிற்கு இன்று அனுப்பியுள்ளமையே இந்த அபாய நிலைக்கு காரணமாகும். இந்து சமுத்திரத்தில் மாலைத்தீவு, சீஷெல்ஸ் மற்றும் மொரிசியஸூக்கு அருகில் உள்ள தியேகோ கார்சியா தொடர்ந்தும் பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் உள்ள வலயமாகும். நீண்டகால குத்தகை அடிப்படையில் பிரித்தானியா அதனை அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்த குத்தகை உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வளைகுடா நாடுகளில் யுத்தம் ஏற்பட்டபோதும் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் லிபியா ஆக்கிரமிக்கப்பட்டபோதும் அமெரிக்கா இந்த தீவில் உள்ள முகாம் மூலம் பாரிய விமானங்களை ஈடுபடுத்தி இருந்தது. தற்போது ஈரான், அமெரிக்க பிரச்சினை உக்கிரமடையும்போது அமெரிக்கா இந்த தீவில் விமானங்களை தரையிறக்கியுள்ளது. 'தாக்குதல் விமானங்களை நிறுத்தி வைக்கும் கப்பல்' என்றே சர்வதேச சமூகம் இந்த தீவை அடையாளப்படுத்துகின்றது. தியேகோ கார்சியாவை அமெரிக்க முகாமிற்கு வழங்கும்போது பிரித்தானியா கையாண்ட செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் மொரிசியஸ், சர்வதேச நீதிமன்றத்தில் ஆட்சேபனைக்குட்படுத்தப்பட்டது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியைக் கைவிடும்பொழுது தியேகோ கார்சியா மற்றும் Chagos தீவுகளை பிரித்தமை ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை மீறும் செயல் என அதன்போது தெரிவிக்கப்பட்டது. இதனை சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பை வழங்கியிருந்தது. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இதனை பொருட்படுத்தாது தொடர்ந்தும் செயற்பட்டாலும், இந்த பிரச்சினை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ரஷ்யா, கிரைமியா, சீனா, தென் சீனா ஆகிய நாடுகளின் கடற்பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படும் கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கும் அமெரிக்கா தியேகோ கார்சியாவில் தங்கியிருப்பது சரியான செயற்பாடு அல்ல என சர்வதேச சமூகம் குற்றம் சுமத்துகின்றது. சிலவேளை அமெரிக்கா, தியேகோ கார்சியாவை கைவிட்டால், நீண்டதூரம் பயணிக்க முடியுமான விமானங்களைக் கையாள முடியுமான மிக அண்மித்த சிறந்த பகுதியாக இலங்கையே காணப்படுகின்றது. அமெரிக்க படையினர் ஈராக்கில் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தற்போது சர்வதேச அரசியல் நெருக்கடியாக உருவெடுத்து வருகிறது. இந்த கொலையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க ட்ரம்ப் நிர்வாகத்திற்கு CIA அமைப்பு வழங்கிய தகவலே காரணமானது. தற்போது ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையான நிலைப்பாட்டில் இருந்து ஈரானுக்கு தாக்குதல் மேற்கொள்வதாக முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்கும் தகவல்கள் சரியானதா என சர்வதேச சமூகம் கேள்வி எழுப்புகின்றது. தனது பிரதிவாதியான ஜோ பைடன் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் காரணமாக டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் CIA அமைப்பின் தகவல்களை நம்பமுடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு இருக்கும்பொழுது ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள CIA தகவல்களை அவர் நம்பியமை சர்வதேச சமூகத்தின் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஈராக்கை ஆக்கிரமித்ததன் பின்னர் தகவல்களை அடிப்படையாக வைத்து ஈராக்கை ஆக்கிரமிக்க முடியாது என அவ்வேளையில் பிரித்தானியாவின் பிரதமராக இருந்த டொனி பிளேயர் குறிப்பிட்டிருந்தார். அவர் அது தொடர்பில் சர்வதேச சமூகத்திடம் மன்னிப்புக் கோரியிருந்தார். அவ்வேளையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொலின் பவல் மற்றும் இராஜாங்க செயலாளர் கொன்டலிசா ரைசும் பின்னர் இவ்வாறான கருத்தை தெரிவித்திருந்தனர். தற்போது ஈரான் தொடர்பில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்து மோதலை ஆரம்பித்து அதற்கு இலங்கை போன்ற தரப்பினரை இணைத்துக்கொண்டு பின்னர் தகவல்கள் பிழையானது என கூறினால் என்னவாகும்? இலங்கை இவ்வாறான மோதல்களுடன் தொடர்புபட வேண்டுமா?