ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

by Staff Writer 06-01-2020 | 8:26 PM
Colombo (News 1st) இலங்கையை முதலீட்டுக்கான ஒரு மையம் என்ற வகையில் சாதகமாக அணுகுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருடன் இன்று (06) காலை இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இலங்கை போன்ற சிறிய நாடுகள் ஏனைய நாடுகளுக்கு ஈடாக அபிவிருத்தி அடையும் பொருட்டு உதவுவது, பிராந்திய மேலாதிக்கத்தை முறியடிப்பதற்கான சிறந்த வழி என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்து செல்ல வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் சில ஏற்பாடுகள் நடைமுறை சாத்தியமற்றது எனவும் அதற்குப் பதிலாக அரசியல்வாதிகள் மாற்றுத் தீர்வுகள் குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஊழலை ஒழிப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் தொழிற்றிறன் மற்றும் தகுதிக்கு வெகுமதி அளிப்பதற்குமான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு குறித்து தூதுக்குழுவினர் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்