நியூசிலாந்துடனான தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

by Staff Writer 06-01-2020 | 3:55 PM
Colombo (News 1st) நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. இன்று நிறைவுக்கு வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 279 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 454 ஓட்டங்களையும் நியூசிலாந்து 256 ஓட்டங்களையும் பெற்றன. 198 ஓட்டங்கள் முன்னிலையுடன் இன்றைய நான்காம் நாளில் அவுஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தது. அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய டேவிட் ​வோர்னர் டெஸ்ட் அரங்கில் 24ஆவது சதத்தை எட்டிய நிலையில் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களைப் பெற்றார். மார்னஸ் லபுசெனே 59 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது. இதன்படி போட்டியில் நியூசிலாந்தின் வெற்றி இலக்கு 416 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து 38 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்களையும் இழந்து தடுமாற்றமடைந்தது. டொம் லெதம் ,ரொஸ் டெய்லர், டொம் ப்ளூன்டல் உள்ளிட்ட வீரர்களால் 25 ஓட்டங்களை கடக்க முடியவில்லை. சகலதுறை வீரரான கொலின் டி கிரேண்ட்ஹோம் 52 ஓட்டங்களை பெற்று ஆறுதலளித்தார். நியூசிலாந்தின் இரண்டாம் இன்னிங்ஸ் 136 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. போட்டியில் நேதன் லயன் மொத்தமாக 10 விக்கெட்களை வீழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இந்தத் தொடர் நடைபெற்றது.

ஏனைய செய்திகள்