இலங்கை – இந்திய இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை – இந்திய இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை – இந்திய இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2020 | 9:38 am

Colombo (News 1st) இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு அசாம் – குவாஹ்ட்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரு அணிகளும் மோதும் 17ஆவது இருபதுக்கு 20 போட்டி இதுவாகும்.

நடைபெற்று முடிந்த 16 போட்டிகளில் 11 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் 8, இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றி கொண்டுள்ளது.

இலங்கை அணி 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதமே இறுதியாக இந்திய அணிக்கு எதிரான தொடரை வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்பிரகாரம் இலங்கை அணியை வீழ்த்தி 12 ஆண்டு கால சாதனையைத் தக்கவைக்கும் முயற்சியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

உபாதையினால் ஓய்வளிக்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்குவது இந்திய அணிக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மெத்தியூஸ் 18 மாதங்களுக்கு பின்னர் இருபதுக்கு 20 போட்டியில் இன்று களமிறங்கவுள்ளார்.

இதேவேளை, குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதேவேளை, போட்டியைக் காண வருகை தரும் ரசிகர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிக்ஸர், பவுண்டரிகளை உணர்த்தும் போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டுசெல்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டம் தொடர்பில், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏதேனும் போஸ்டர்களில் எழுதி, எதிர்ப்பை வெளிப்படுத்தினால் சர்ச்சை ஏற்படலாம் என ரசிகர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரசிகர்கள் கையடக்கத் தொலைபேசி, கார் சாவி, மோட்டார்சைக்கிள்களின் சாவி, கைப்பை ஆகியவற்றை கொண்டுசெல்வதற்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்