ஹப்புத்தளை விமான விபத்தில் பலியானோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

by Staff Writer 04-01-2020 | 8:18 PM
Colombo (News 1st)  விமானப்படைக்கு சொந்தமான Y12 விமானம் விபத்திற்குள்ளான இடத்தை கண்காணிப்பதற்காக விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் இன்று அங்கு சென்றிருந்தார். விமான விபத்தில் உயிரிழந்த விமானப்படை உறுப்பினர்களின் பூதவுடல்கள், பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பதுளை பொது வைத்தியசாலையிலிருந்து விமானம் மூலம் பூதவுடல்கள் கொண்டு செல்லப்பட்டன. விமானம் விபத்திற்குள்ளான போது படையணி தலைவர் புத்தி வீரபெத்த விமானியாக செயற்பட்டார். பிரிவுத் தலைவர் லங்காபுர குலத்துங்க உதவி விமானியாக செயற்பட்டுள்ளார். இதன்போது, விமானப்படை வீரர்களான L.A.C.ஹெட்டியாரச்சி, D.W.குமாரவும் விமானத்தில் பயணித்திருந்தனர். விமானியான படையணித் தலைவர் புத்தி வீரபெத்த, ஹோதகந்தர வடக்கு பகுதியைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையாவார். விபத்தில் உயிரிழந்த லங்காபுர குலத்துங்க, கம்பளை ஹோண்டியாதெனிய பகுதியைச் சேர்ந்தவராவார். குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான இவர் எதிர்வரும் மார்ச்சில் திருமண பந்தத்தில் இணையவிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த 37 வயதான D.W. குமார திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்தவர் என்பதுடன், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். மாத்தறை - முறுதவெல தெலிஜ்ஜவிலவைச் சேர்ந்த L.A.C.ஹெட்டியாரச்சியின் உயிரும் இந்த விபத்தில் காவுகொள்ளப்பட்டது. நேற்று (03) காலை 9.15 அளவில் ஹப்புத்தளை - தம்பிபீல்ல மாவத்தை, ஐஸ்பீல்ல பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.