ஹப்புத்தளை விமான விபத்து: விமானப்படையின் விசாரணை ஆரம்பம்

by Staff Writer 03-01-2020 | 8:47 PM
Colombo (News 1st) ஹப்புத்தளை - தம்பபிள்ளை மாவத்தை, ஐஸ்பீல்ல பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்று இன்று காலை விபத்திற்குள்ளானதில் விமானப்படை வீரர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். விமானப்படைக்கு சொந்தமான Y12 ரக விமானமே இன்று காலை 9.15 அளவில் விபத்திற்குள்ளானது. விமானம் உடைந்து வீழும் போது தீப்பற்றியுள்ளதுடன், அந்த சந்தர்ப்பத்தில் விமானிகள் இருவரும், கண்காணிப்பாளர்கள் இருவரும் விமானத்தில் இருந்துள்ளனர். விமானப்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் தீயணைக்கப்பட்ட போதிலும், விமானத்தில் இருந்த எவரையும் காப்பாற்ற முடியாமற்போனது. உயிரிழந்த விமானப்படை உறுப்பினர்களின் சடலங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர். விமானம் விபத்திற்குள்ளான இடத்திற்கு அருகிலிருந்த பெண் ஒருவர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து இடம்பெற்ற பகுதியில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பண்டாரவளை நீதவான் விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிட்டார். உயிரிழந்த நால்வர் தொடர்பான பிரேதப் பரிசோதனை இடம்பெற்ற பின்னர், அது தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, விமானப்படையின் விசாரணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு கரையோரப் பகுதியை கண்காணிப்பதற்காக வீரவில விமானப்படை முகாமில் இருந்து Y12 ரக விமானம் இன்று காலை 8.55 அளவில் புறப்பட்டுள்ளது. வீரவில மற்றும் தியத்தலாவ விமானப்படை முகாம்களுக்கு இடைப்பட்ட பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது. விமான விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. விமானப்படை இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, சீனாவில் தயாரிக்கப்பட்ட Y12 ரக விமானம், 1986 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. 15 தொடக்கம் 17 பயணிகள் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தை, குறுகிய விமான ஓடுதளங்களில் பயன்படுத்த முடியும். கடந்த காலத்தில் விமானப்படைக்கு சொந்தமான Helitours நிறுவனம் செயற்பாட்டில் இருந்த காலப்பகுதியில், சிவில் விமான போக்குவரத்திற்காக இந்த விமானத்தை பயன்படுத்தியமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த விமானங்களின் பாதுகாப்பு தொடர்பில் சிவில் விமான சேவை அதிகார சபையின் அனுமதி கிடைக்காமையே இதற்கு காரணமாகும். எனினும், இராணுவ நடவடிக்கைகளுக்காக மாத்திரம் இந்த விமானத்தை விமானப்படை தற்போது பயன்படுத்துகின்றது. எவ்வாறாயினும், பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே விமானம் புறப்பட்டுச்சென்றதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.