by Staff Writer 03-01-2020 | 7:20 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று மாலை அறிவித்தார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடியதுடன், இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட புதிய சில பதவிகள் அறிவிக்கப்பட்டன.
புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
சபை முதல்வராக அமைச்சர் தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டார்.
ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பிற்பகல் பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று, எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
பாராளுமன்றத்தின் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலுள்ள உத்தியோகப்பூர்வ அலுவலகங்களில் கடமைகளை ஆரம்பித்தனர்.
சபை முதல்வராக நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன கடமைகளை ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் பிரசன்னமாகியிருந்தனர்.