அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 03-01-2020 | 7:45 PM
Colombo (News 1st) மக்களின் இறையாண்மை உறுதிப்படுத்தப்படும் வகையில், பலமான நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம் மற்றும் சுயாதீன நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கு அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமானது. இராணுவ மரியாதை, 21 மரியாதை வேட்டுக்கள் என்பன ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய இரத்து செய்யப்பட்டதுடன், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. ஜனாதிபதியின் வருகையை அடுத்து, பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதன் பின்னர் சபாநாயகரால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். இதனையடுத்து, பாராளுமன்ற அக்ராசனத்தில் அமர்ந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார். ''சுபீட்சத்தின் நோக்கு'' கொள்கைப் பிரகடனத்தை சபையில் சமர்ப்பித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பல்வேறு கொள்கை ரீதியான விடயங்களையும் முன்வைத்தார். அவற்றில் உள்ளடங்கியுள்ள சில முக்கிய விடயங்களாவன...
  • தேசிய பாதுகாப்பு பொறிமுறையை மீண்டும் பலப்படுத்தல்
  • முப்படையினர், பொலிசாருக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுடன், தேசிய புலனாய்வுப் பிரிவு வலையமைப்பை மறுசீரமைத்து வலுப்படுத்தல்
  • தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும் அடிப்படைவாதத்திலிருந்தும் பாதாள செயற்பாடுகளிலிருந்தும் திருடர்களிடமிருந்தும் கப்பம் பெறுவோரிடமிருந்தும் போதைப்பொருள் இடையூறிலிருந்தும் சாதாரண மக்களின் வாழ்க்கையை சீர்குலைப்பவர்களிடமிருந்தும் மீட்பதுடன், பெண்கள், சிறுவர் துன்புறுத்தல்களற்ற பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்தல்
  • மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றனவா, அவர்கள் மகிழ்வுடன் வாழ்கிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்கு புதிய நடைமுறை பின்பற்றப்படல்
  • வரிக்குறைப்பின் மூலம் பொருட்கள், சேவைக் கட்டணக் குறைப்பு
  • 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலத்தில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் இலங்கையை தெற்காசியாவின் பொருளாதார மையமாக முன்னேற்ற வகுத்த திட்டத்தை முன்கொண்டு செல்லல்
  • வலயத்திலுள்ள நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் வர்த்தகத்தை நாட்டில் ஸ்தாபிப்பதற்கான முதலீடுகளை விஸ்தரித்தல்
  • நாட்டின் எந்தவொரு இடத்திலிருந்தும் இன்னுமொரு இடத்திற்கு சில மணித்தியாலங்களில் பயணிக்கக்கூடிய வகையில், அதிவேக வீதிக்கட்டமைப்பு, பெருந்தெருக்கள், ரயில் சேவையை மேம்படுத்தல்
  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு அடுத்த மாதத்திற்குள் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல்
  • மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையூடாக முன்னேற்றமடைவதற்கு முயற்சிக்கும் அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்கல்
  • மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புள்ள நேர்மையான அரச சேவையை உறுதிப்படுத்தல்
  • ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தல்
  • நாட்டின் கனிய வளங்களுக்கு பெறுமதி சேர்க்கும் தொழிற்துறைக்கான முதலீடுகளுக்கு விசேட சலுகையை வழங்குதல்
  • ஆபிரிக்க வலய நாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் மாணிக்கக்கல்லின் பெறுமதியை அதிகரித்து விற்பனை செய்யக்கூடிய, சர்வதேச ரீதியிலான இரத்தினக்கல் வர்த்தகத் தொகுதியொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
  • விவசாயம், பெருந்தோட்டக் கைத்தொழில், கடற்றொழில் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படல்
  • விவசாயத்துறையில் சேதனப் பசளைப் பயன்பாட்டை பரவலாக்குதல்
  • மனிதவள அபிவிருத்தியை அரசாங்கத்தின் முக்கியமானதொரு பொறுப்பாக அடையாளப்படுத்தல்
  • இளைஞர், யுவதிகள் உயர் கல்வியைப் பெறுவதற்குள்ள சந்தர்ப்பத்தை விஸ்தரிப்பது குறித்து கவனம் செலுத்தல்
  • சந்தைத் தேவைகளை இலக்கிட்டு பல்கலைக்கழக பாடநெறிகள் மற்றும் தாமாகவே கற்கக்கூடிய குறுகிய கால பாடநெறிகளை அறிமுகப்படுத்தல்
  • மூன்று வருடகால டிப்ளோமாவை நான்கு வருடகால பட்டப் படிப்பாக உயர்த்தல்
  • உயர் தரத்தில் சித்தி பெறாதவர்களுக்கும் சாதாரண தரம் வரை கற்ற மாணவர்களுக்கும் தொழில்நுட்பம், இயந்திரவியல் பிரிவின் அறிவினை விருத்தி செய்வதற்காக இயந்திரவியல், தொழில்நுட்ப கல்லூரித் தொகுதியை வலுப்படுத்தல்
  • அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கான வசதியை மேம்படுத்தல்