எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2020 | 7:23 pm

Colombo (News1st) எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளை (03) ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, அதி விசேட வர்த்தமானி மூலம் கடந்த 2ஆம் திகதி பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

அதற்கமைய, பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதிக்காக தீர்க்கப்படவிருந்த 21 மரியாதை வேட்டுக்கள் மற்றும் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த இராணுவ மரியாதை ஆகிய சம்பிரதாயங்கள், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வரவேற்பு நிகழ்வின் பின்னர் நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றக் கூட்டத்தொடரின் தலைமை உரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆற்றவுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி முன்வைக்கவுள்ளார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றிய பின்னர், சபை அமர்வு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படும்.

1947 ஆம் ஆண்டில் இருந்து 50 இற்கும் அதிக தடவைகள் பாராளுமன்ற அமர்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், 1978 ஆம் ஆண்டிற்கு பின்னர் 25 கூட்டத்தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், அதுவரை காணப்பட்ட சிம்மாசன உரைக்கு பதிலாக, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையை ஆற்றிய பின்னர், சபை ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும்.

இதன்போது புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கூறுகின்றார்.

இதேவேளை, ரஞ்சித் சொய்சாவின் மறைவின் பின்னர் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக வருண லியனகே நாளை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்