இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா?

by Staff Writer 01-01-2020 | 9:34 PM
Colombo (News 1st) இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு நீண்ட வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. எனினும் இந்த உறவில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தும் விடயமாக இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினை உருவெடுத்துள்ளது. பல வருடங்களாக தீர்க்கப்படாதுள்ள இந்தப் பிரச்சினை மலர்ந்துள்ள புதுவருடத்திலேனும் முடிவுக்கு வருமா? இலங்கையின் வடக்குக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்களால் கடல் வளம் சூறையாடப்படுவதாக இலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சுமத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இரு நாடுகளும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும், அது பலனளிக்கவில்லை இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 6 வருடங்களில் வருடங்களில் 361 படகுகளுடன் 1,778 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. 14 இந்திய மீனவர்கள் தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது 9 விசைப்படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.