ரூமி மொஹமட் விளக்கமறியலில்…

ரூமி மொஹமட் விளக்கமறியலில்…

ரூமி மொஹமட் விளக்கமறியலில்…

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2019 | 7:01 pm

Colombo (News 1st) வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ரூமி மொஹமட் இன்று (31) ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வௌ்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்கேநபர்கள் இருவருக்கும் ரூமி மொஹமட்டினால் தலா 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், வழக்கின் சந்தேகநபராக ரூமி மொஹமட்டைப் பெயரிடுமாறும் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ரூமி மொஹமட்டை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் மன்றுக்கு அறிவித்தார்.

இதன் பிரகாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய ரூமி மொஹமட்டிடம் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர், இன்று கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட 2 சந்தேகநபர்களுக்கு அரசின் பொறுப்புவாய்ந்த நிறுவனமொன்றின் தலைவராக செயற்பட்டபோதே ரூமி மொஹமட் பணம் வழங்கியுள்ளதாக பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார்

சந்தேகநபரிடம் இதுவரை வாக்குமூலம் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி சொலிஷிட்டர் ஜெனரல், சந்தேகநபரின் வங்கிக் கணக்குகளை ஆராய வேண்டும் எனவும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதன்காரணமாக சந்தேகநபரிக்கு பிணை வழங்க வேண்டாம் என பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான், சந்தேகநபரான ரூமி மொஹமட்டை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்