by Staff Writer 31-12-2019 | 2:52 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அன்றைய தினம், பிற்பகல் 3 மணிக்கு வருகைதருமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின்போது முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 2ஆம் திகதி கூடவுள்ளனர்.
இந்தக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 3ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது.
அரச கணக்கு செயற்குழு, நிதி செயற்குழு உள்ளிட்ட செயற்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் புதிய அமர்வுக்கு அமைய அரச பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.