நீதியை நிலைநாட்டுவதில் தாமதம் ஏன்?

முறிகள் மோசடி விடயத்தில் நீதியை நிலைநாட்ட தாமதம் ஏன்?

by Staff Writer 30-12-2019 | 10:22 PM
Colombo (News 1st) சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டு இன்றுடன் 2 வருடங்கள் ஆகின்றன. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல சிபாரிசுகளை, முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு முன்வைத்திருந்தது. 4 வருடங்கள் 10 மாதங்களுக்கு முன்னர் நியூஸ்ஃபெஸ்ட், இலங்கையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பிலான தகவல்களை வௌியிட்டிருந்தது. சாதாரண செயன்முறையிலிருந்து வெளியே சென்றமை, மத்திய வங்கியின் அளுநர் மற்றும் அவரின் மருமகனுக்கு இடையிலான ஆர்வம் தொடர்பிலான முரண்பாடு தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வௌியிட்டு சில நாட்களுக்குப் பின்னர் அவ்வேளையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தினார். முறிகள் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புபட்ட 3 சட்டத்தரணிகள் அடங்கிய பிட்டிபன குழுவை தான் நியமித்ததாக முன்னாள் பிரதமர் ஏற்றுக்கொண்டார். அவ்வேளையில், மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தவர் இந்த சம்பவத்தின் குற்றவாளி அல்ல எனவும் பேர்ப்பச்சுவல் நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அந்தக் குழு பரிந்துரைத்தது. 2 வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த, மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை கையளித்த பின்னர், அவ்வேளையில் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த, ஒஸ்டின் பெர்னாண்டோ அந்த அறிக்கையை சுவடிகள் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு எடுத்த தீர்மானமும் சமூகத்தில் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த அறிக்கையின் இரகசிய தகவல் அடங்கிய 106 பக்கங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின்படி முறிகள் மோசடி மூலம் அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா தவிர்க்கக்கூடிய நட்டம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின்படி இதற்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனே பொறுப்புக் கூற வேண்டும். அத்துடன், பேர்ப்பச்சுவல் நிறுவனமும் இந்த நட்டத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நட்டத்தை ஈடு செய்வதற்கு அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் ஆணைக்குழுவின் சிபாரிசாக அமைந்தது. எனினும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் இலங்கையில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார். அர்ஜூன மஹேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம், அதன் உரிமையாளர்களான அர்ஜூன அலோசியஸ் மற்றும் ஜெஃப்ரி அலோசியஸ், பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரிடம் இருந்து நட்டத்தை ஈடு செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. எனினும், அதற்காக இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முறிகள் கொடுக்கல் வாங்கல் ஊடாக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட முழுமையான நட்டத்தை கணக்கிடுவதற்காக 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இடம்பெற்றுள்ள முறிகள் விநியோகம் தொடர்பில் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளுமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்தது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்தபோது, கடந்த 2ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. முதலாவது முறிகள் மோசடி தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 2016 ஆம் ஆண்டு இரண்டாவது முறிகள் மோசடியும் இடம்பெற்றது. அது தொடர்பில் இதுவரை சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை. அதன்மூலம் ஏற்பட்ட நட்டம் முதலாவது முறிகள் மோசடி மூலம் ஏற்பட்ட நட்டத்தைவிட 7 மடங்கு அதிகமானது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தளவு பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தும் நடவடிக்கை எடுப்பதில் நிலவும் தாமதம் எதனை உணர்த்துகின்றது? திட்டமிட்ட வகையில் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டதை இந்த தாமதம் உறுதிப்படுத்துகின்றது அல்லவா?