வட கொரி ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

நேர்மறையான தாக்குதல் திட்டத்திற்கு வட கொரிய ஜனாதிபதி அழைப்பு

by Staff Writer 30-12-2019 | 5:44 PM
Colombo (News 1st) வட கொரியாவின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த நேர்மறையான மற்றும் தாக்குதல் திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வழமைக்கு மாறாக ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடனான அணுவாயுத அழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறுத்தி பாரிய ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக வட கொரியா அறிவித்ததைத் தொடர்ந்தே இந்த அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. வட கொரியாவின் இந்த நடவடிக்கையானது பாரிய ஏமாற்றமாக அமையுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. வட கொரிய ஜனாதிபதியின் இந்த அழைப்பானது அந்நாட்டின் அணுவாயுதத் திட்டங்களின் மூலோபாய மற்றும் தந்திரோபாய மேம்பாடாகவே கருதப்படுவதாக விசேட ஆய்வாளரொருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு விதிக்கப்பட்ட ஆண்டிறுதி காலக்கெடுவிற்குள், அந்நாடு விசேட சலுகைகள் எதனையும் வழங்காதவிடத்து புதிய வழியில் பயணிக்கவுள்ளதாக அமெரிக்காவை வட கொரியா முன்னர் அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.