தேர்தலில் தேரர்கள் போட்டியிடுவது பொருத்தமற்றது - அஸ்கிரிய பீட பதிவாளர்

by Staff Writer 30-12-2019 | 8:27 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலில் தேரர்கள் போட்டியிடக்கூடாது என அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது வலியுறுத்தினார்.
பாராளுமன்றத் தேர்தலில் தேரர்கள் மீண்டும் ஒரு தடவை போட்டியிடும் நிலை நாட்டில் காணப்படுகின்றமையை எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சிங்கள - பௌத்த அரசாங்கம் என்ற ரீதியில் தலைவர் ஒருவரை நாம் தெரிவுசெய்துள்ளோம் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இந்த அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலில் தேரர்கள் போட்டியிடுவது பொருத்தமற்றது என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் நாங்கள் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவருக்கும் அறியப்படுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் மேலும் தெளிவூட்டல்களை வழங்கி தேரர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது ஏற்புடையதல்ல என்பதை சுட்டிக்காட்டுவோம்
என அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மிகிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வலவா ஹெங்குனவெவே தம்மரத்தன தேரர் இந்த விடயம் தொடர்பில் நேற்று இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
தேரர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என மக்களிடம் விசேட வேண்டுகோள் விடுக்கின்றேன். தேரர்கள் நாய் சின்னத்தில் வாக்கு கேட்கின்றனர். இதுவா எமது சின்னம். தர்மச்சக்கரமே எமது சின்னம். தேரர்களை பாராளுமன்றத்திற்கு எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி மற்றும் ஏனைய கட்சிகளிடம் நாம் தயவுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்
என மிகிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வலவா ஹெங்குன தம்மரத்தன தேரர் கூறியுள்ளார்.