by Staff Writer 30-12-2019 | 7:40 PM
Colombo (News 1st) தனிநபர் தொடர்பான தகவல்களை தேசிய தரவுநிலையமொன்றின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்கிணங்க, தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், குடிவரவு குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பை பதிவுசெய்தல் உள்ளிட்ட அனைத்து தனிநபர் தொடர்பான தகவல்களையும் ஒரே தரவுநிலையத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதனூடாக நேரம், மனிதவலு மற்றும் பெருமளவு பணம் விரயமாகுவதைக் குறைக்க முடியுமென இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒரே தகவல்களை பல நிறுவனங்களில் சேகரிக்கும் முறைமையே தற்போது காணப்படுவதாகவும் அவற்றை ஒரே கட்டமைப்பினுள் கொண்டுவருவதனூடாக தாமதங்களைத் தவிர்த்து மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவையை வழங்க முடியுமென ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், போலியான மற்றும் மோசடி தகவல் பரிமாற்றங்களையும் இதனூடாக தவிர்க்கமுடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகள் நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்குவகிப்பதாகவும் தற்போது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் செயற்றிட்டங்களை பொறுப்பான அமைச்சுகள் அல்லது நிறுவனங்களிடம் கையளிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தியுள்ளார்.