சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிக்கு பிணை

by Staff Writer 30-12-2019 | 2:46 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்ஸிசை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதம பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் கடந்த 16ஆம் திகதி மாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் சுவிஸ் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார். தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப்பிணைகளில் அவரை விடுவிப்பதற்கு அனுமதி வழங்கிய பிரதம நீதவான், அவரின் கடவுச்சீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், குறித்த தூதரக அதிகாரி தாம் வசிக்கும் இல்லத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்வதாயின் அது குறித்து மன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபரை இன்று மன்றில் ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்தில், சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரிகள் சிலரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.