ஈரானிய ஆயுதக்குழுக்களின் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானிய ஆயுதக்குழுக்களின் மீது அமெரிக்கா வான் தாக்குதல்

by Staff Writer 30-12-2019 | 3:06 PM
Colombo (News 1st) ஈராக் மற்றும் சிரியாவில் ஈரானிய ஆதரவு ஆயுதக்குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இந்த வான் தாக்குதல்களில் கட்டைப் ஹெல்புல்லா (Kataib Hezbollah) ஆயுதக்குழுவின் குறைந்தது 25 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 50 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக ஈராக்கிய பாதுகாப்பு மூலங்கள் தகவல் வௌியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் கட்டைப் ஹெல்புல்லா அமைப்பின் 5 இலக்குகள் மீது F-15 ஜெட் விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். கிர்குக் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே, இந்தத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரொக்கட் தாக்குதலில் பணியாளர்கள் சிலரும் காயமடைந்திருந்தனர். இந்தநிலையில், தாக்குதலுக்கு உள்ளாகும் கட்டைப் ஹெல்புல்லா ஆயுதக்குழுவை, பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா கருதுவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனிடையே அமெரிக்கர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதற்குத்தக்க பதிலடி வழங்கப்படுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.