4.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை

by Staff Writer 30-12-2019 | 10:03 PM
Colombo (News 1st) அடுத்த வருடத்திற்குள் 4.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. இந்தத் தொகையை ரூபாவில் குறிப்பிடுவதாயின், 800 பில்லியனுக்கும் அதிக தொகையாகும். இலங்கை வரலாற்றில் வருடமொன்றில் செலுத்தும் அதிகூடிய கடன் தவணையாக இது அமைந்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய, இவ்வருட முடிவில் அரசாங்கத்தின் கடன் 12,863.5 பில்லியன் ரூபாவாகும். இதில் 6,523.5 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடனாக அமைந்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய எஞ்சிய 6,339.9 பில்லியன் ரூபா வௌிநாட்டுக் கடனாகும். இதற்கயமை, இந்த வருடத்தின் முடிவில் சுமார் 35 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த வெளிநாட்டுக் கடனாகக் காணப்படுகின்றது. இதில் 4.8 பில்லியன் டொலரை அடுத்த வருடத்திற்குள் செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கடனை எவ்வாறு மீள செலுத்துவது? தற்போதைக்கு நான்கரை மாதங்களுக்கு இறக்குமதிக்குத் தேவையான 7.5 பில்லியன் கையிருப்பில் உள்ளதுடன், அதில் 4.8 பில்லியனைக் கடனை மீள செலுத்துவதற்காகப் பயன்படுத்த முடியும். இல்லாவிட்டால், வௌிநாட்டு நேரடி முதலீடுகள் போன்ற பாரியளவில் டொலர் வருமானம் கிடைக்கும் விரைவான நடவடிக்கையூடாகவும் இதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும். எனினும், கடனை மீள செலுத்துவதற்காக மீண்டும் கடன் பெறுவது சாதாரணமாகப் பின்பற்றப்படும் நடைமுறை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
எம்மிடமுள்ள கையிருப்பில் இந்தக் கடனை செலுத்துவதற்கு இவர்கள் தயாரா என்பது எனக்குத் தெரியாது. அவ்வாறு செய்வதும் தவறானது. கடன் பெறுவது கடினமானதாக அமையும். தரப்படுத்தல் தொடர்பான பிரச்சினை தற்போது ஏற்பட்டுள்ளமை அதற்குக் காரணமாகும். தற்போதைக்கு Fitch நிறுவனத்தினால் பின்தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே, தரப்படுத்தலில் பின்தள்ளப்பட்டால், சர்வதேச ரீதியில் கடன் பெறுவதில் தற்போதுள்ள நிலையைவிட சிக்கல் நிலை ஏற்படும். நாம் கடந்த வருடத்தில் வட்டி குறித்து அதிகக் கவனம் செலுத்தினோம். இந்த வருடத்தில் அதிக வட்டியை செலுத்த வேண்டியுள்ளது. அதில் நன்மையுமுள்ளது. 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை இந்த அரசாங்கம் செலுத்த வேண்டியதில்லை. வௌிநாட்டுக் கடனை செலுத்துவது தொடர்பில் முதல் ஒன்பது மாதங்களில் பாரிய சிக்கல் ஏற்படாது
என பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இணை அமைச்சரவைப் பேச்சாளரின் கருத்திற்கமைய, இந்தக் கடன் தவணையை செலுத்துவது சிரமமான விடயமல்ல.
இது குறித்து நீங்கள் குழப்பமடைய வேண்டாம். இதற்காக அரச நிறுவனமொன்றுள்ளது. அரச வங்கிகள், நிதிப் பிரநிதி மற்றும் நிதி ஆலோசகர் என்ற வகையில் இலங்கை மத்திய வங்கியில் தனியான திணைக்களமொன்றுள்ளது. அரச கடன் முகாமைத்துவம் தொடர்பில் அந்தத் திணைக்களம் ஒரு சதமேனும் எஞ்சாத வகையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இம்முறையும் அந்த நிபுணர்கள் இந்த செயற்பாட்டை முன்னெடுப்பார்கள்
என இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கூறியுள்ளார். அமைச்சர் கூறும் வகையில் கடனை மீள செலுத்துவதற்கு மத்திய வங்கியிடமுள்ள திட்டம் என்ன?
கடனை செலுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கும். வணிகக் கடன் பெறுவதா, எவ்வளவு பிணையங்களை வௌியிடுவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும். பல்வேறு கடன் முறைமைகள் உள்ளன. நாம் இது குறித்து முன்னர் கலந்துரையாடியுள்ளோம். குறுகிய கால, மத்திய கால, நீண்ட கால கடன் செலுத்தல் திட்டம் என்னவென்பதை அரசாங்கம் தீர்மானிக்கும். எனினும், குறிப்பிடத்தக்களவு கடன் பெற வேண்டிய நிலை உண்மையில் அரசாங்கத்திற்கு ஏற்படும். அதேபோன்று, சலுகைக் கடனுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற நிறுவனங்களை நாட முடியும். எவ்வாறாயினும், வருடமொன்றுக்கு 1.5 மில்லியன் டொலர் வரை அபிவிருத்தித் திட்டங்களுக்காகக் கிடைக்கும். அதேபோன்று, இலங்கை அபிவிருத்தி முறிகள் போன்ற விடயங்கள் ஊடாகவும் நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், சாமுராய் பிணையங்கள், சலுகைக் கடன் போன்ற மாற்று யோசனைகளும் உள்ளன. வருடத்திற்கான நிதித் தேவைக்கமைய எவ்வாறான விடயங்களை முன்னெடுப்பது என்பது குறித்து நிதி அமைச்சு தீர்மானிக்கும்
என இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க பதிலளித்துள்ளார். கடனை மீள செலுத்துவதற்காக மீண்டும் கடன் பெறப்படவுள்ள நிலையில், சில வரிச்சலுகைகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கம் அறிவித்தது. இந்த வரிச்சலுகையை நடைமுறைப்படுத்துவதால், இந்த வருடத்தில் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானத்தை அடைய முடியாது என்பது, சர்வதேச கடன் நிரல்படுத்தல் நிறுவனங்களின் நிலைப்பாடாகும். இதனால் கடனை மீள செலுத்த வேண்டிய கட்டாய நிலை அடுத்த வருடத்திற்குள் இலங்கைக்கு ஏற்படும் என அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. புதிய அரசாங்கம் இந்த நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில், இளைஞர் யுவதிகளுக்கு ஒரு இலட்சம் தொழில் வழங்குவதற்கும், பரிபூரண கிராமம் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அரச செலவு மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அரச வருமானம் குறைவடையும் நிலையில், செலவு அதிகரிப்பதால் சிக்கல் நிலை ஏற்படும். உதாரணமாக, 500 பில்லியன் ரூபா குறைவடைந்தால், அதாவது எதிர்பார்த்த 2,000 பில்லியன் ரூபாவில் 500 பில்லியன் குறைவடைந்தால், அது அரசாங்கத்தின் 25 வீத வருமானம் குறைவடைந்ததாக அமையும். ஒருபுறம் அரச வருமானம் குறைவடையும். மறுபுறம் இன்னும் அரச ஊழியர்களை இணைத்துக்கொள்வதால், வரி நீக்கப்பட்டால், பாரிய சவாலை எதிர்நோக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்படும்
என கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
வருமானம் குறைவடையும்போது, தற்போது காணப்படும் கடன் தொகையால் துண்டுவிழும் தொகை ஏற்படும். இந்த வருடத்தில் சமுராய் பிணை மற்றும் பென்டா முறிகள் விநியோகிக்கப்பட்டு, ஒக்டோபர் மாதத்தில் சவரின் பிணை விநியோகிக்கப்படும் ஜூன் மாதத்தின் பின்னரே சவரின் பிணை வரும். அவ்வாறு செய்து இந்த 4.8 பில்லியன், இல்லாவிட்டால் 5 பில்லியன் கடனை செலுத்துவதற்கு நேரிட்டாலும், இதனைத் தீர்ப்பதற்கு சந்தை மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். ஏற்றுமதி வீதம், மொத்த தேசிய உற்பத்தி வீதம் ஆகியவற்றை அதிகரித்தால் இந்த நிலையை எதிர்கொள்ள முடியும்
என பொருளாதார நிபுணர் சஞ்ஜீவ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.