ராஜித சேனாரத்னவின் உடல்நிலை தொடர்பில் அறிக்கை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல்நிலை தொடர்பில் அறிக்கை

by Staff Writer 28-12-2019 | 9:50 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல்நிலை தொடர்பில் அறிக்கையொன்று வௌிடப்படவுள்ளது. ராஜித சேனாரத்னவின் உடல் நிலையைப் பரிசோதிப்பதற்காக அவர் சிகிச்சை பெற்றுவரும் நாராஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு, சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி இன்று முற்பகல் சென்றிருந்தார். ராஜித சேனாரத்னவின் உடல்நிலை தொடர்பான முழுமையான அறிக்கை வைத்திய அதிகாரியால் வௌியிடப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் அமைச்சருக்கு சிகிச்சையளிக்கும் விசேட மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே அந்த அறிக்கை வௌியிடப்படவுள்ளது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ராஜித சேனாரத்னவைத் தேசிய வைத்தியசாலை அல்லது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது. இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பாதுகாப்பிற்காக 4 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைக்காவலர், சார்ஜன்ட் மற்றும் ஆயுதங்களுடன் இரு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனைத்தவிர, அவருக்கு பாதுகாப்பளிக்குமாறு பொரளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ராஜித சேனாரத்னவை சந்திப்பதற்காக அவரின் உறவினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர். கேள்வி - அரசியல்வாதி என்ற வகையில் இந்த சம்பவத்தை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? இது பழிவாங்குவதற்காக முன்னெடுக்கப்படும் விடயமாகும். அவரின் சுகயீனம் பொய் என கூற முடியாது. மருத்துவ அறிக்கையில் அனைத்து விடயங்களும் பெறப்படும். அவருக்கு இருதய சத்திர சத்திரசிகிச்சையொன்று ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவம் ஏற்படுகின்றபோது, அதிர்ச்சி, அச்சம், பதற்றம் ஆகியன ஏற்பட்டவுடன் சிலவேளை சுகயீனமடைய இடமுண்டு. அரசியல்வாதிகள் என்ற வகையில் முகாம்கள் மாற்றமடைகையில் அந்தக் குழுவும் மாற்றமடையும். எனினும், நாம் செய்ததைத் போன்று செய்வது சரியல்ல. ஏதேனும் தவறு காணப்படுமாயின், போலியாக ஊடக கண்காட்சியைக் காண்பிக்காது உள்ளே அழைத்து அதனை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும். நாட்டை மேம்படுத்துவதற்காகவே 69 இலட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். வெங்காயத்தின் விலையைக் குறைத்து மக்களுக்கு நன்மையை ஏற்படுத்துவதை விடுத்து நாம் இழைத்த தவறுகளையே இவர்களும் செய்வது சிறந்ததல்ல என்றே நான் நினைக்கின்றேன். நாமும் இதே தவறை இழைத்துள்ளோம். ஒவ்வொருவர் பின்பாக சென்றோம். இதனைவிட நேர்த்தியாக செயற்படுவது சிறந்தது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பதிலளித்துள்ளார்.