'ராஜித சேனாரத்ன இதுவரை கைது செய்யப்படவில்லை'

ராஜித சேனாரத்ன இதுவரை கைது செய்யப்படவில்லை - பிரதி சொலிஷிட்டர்

by Staff Writer 27-12-2019 | 10:28 AM
Colombo (News 1st) கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், முன்னார் அமைச்சர், டொக்டர் ராஜித சேனாரத்ன இதுவரை கைது செய்யப்படவில்லை என பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், நீதிமன்றத்திற்கு இன்று (27) அறிவித்துள்ளார். டொக்டர் ராஜித சேனாரத்ன, நாரஹென்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜித சேனாரத்னவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அவரின் உடல்நிலை சீராக இல்லை என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளதால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பின்போது டொக்டர் ராஜித சேனாரத்னவுடன் கருத்து தெரிவித்த இருவரும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டொக்டர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை தொடர்பில் மீள விசாரணை நடத்துமாறு, இதன்போது அவர் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இந்த கோரிக்கையை பிரதம நீதவான் நிராகரித்துள்ளார். இதேவேளை, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அரசியல் பிரமுகர்கள் சிலர் இன்று சென்றிருந்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியை முடக்கும் நோக்குடன், ஆளும் கட்சியினர் தற்போது செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். ராஜித சேனாரத்னவை வைத்தியசாலையில் பார்வையிட்ட பின் அங்கிருந்து வௌியேறும் போதே ஊடகங்களுக்கு அவர் இதனை கூறியுள்ளார். ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கருகில் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.