சந்தை வட்டி வீதத்தை தீர்மானிக்கும் வட்டி வீதக் கொள்கையை மாற்றமின்றி பேண தீர்மானம்

by Staff Writer 27-12-2019 | 10:08 PM
Colombo (News 1st) சந்தை வட்டி வீதத்தைத் தீர்மானிக்கும் தமது வட்டிவீதக் கொள்கையை மாற்றமின்றி பேணிச் செல்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபையின் இந்தத் தீர்மானம் குறித்து அறிவிப்பதற்காக இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்டிருந்தது. மத்திய வங்கியின் புதிய ஆளுநர் W.D. லக்‌ஷ்மன் கலந்துகொண்ட முதலாவது ஊடக சந்திப்பு மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நாம் வௌியிட்டுள்ள நடைமுறைகளுக்கு அமைய, டிசம்பர் மாதத்தில் வங்கிகள் தமது கடன் வட்டிவீத அடிப்படையை 250 வீதத்தால் குறைக்க வேண்டியிருந்தது. மற்றுமொரு அடிப்படைக்கு அமைய அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் 250யினால் குறைக்க வேண்டும். எனினும், சில வங்கிகள் இதற்கமைய செயற்படவில்லை. இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமை தொடர்பில், எதிர்வரும் வாரத்தில் தண்டப்பணம் விதிப்பதற்கு அல்லது வரையறைக்கு உட்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். உதாரணமாக, இந்த வருடத்தில் ஏழு வங்கிகள் அடிப்படையை 250யினால் தமது வட்டியை குறைக்க வேண்டியிருந்தது. இந்த வங்கிகள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நிதிச்சபையுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும்
என இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தமது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வௌியிலுள்ள நிலை குறித்து ஆராய்ந்தால் ஏற்றுமதியில் காணப்படும் மந்தநிலையின் அதிகரிப்பு, நேரடி வௌிநாட்டு முதலீடுகள் குறைவடைந்தமையால் அதிகம் கடனை மையமாகக் கொண்டு செயற்பட வேண்டியேற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் நாம் இதுவரை செயற்பட்ட புதிய லிபரல்வாத முறைமைக்குப் பதிலாக, தேசிய கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இதற்கு மாற்று யோசனையை வழங்குவதற்கு எனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவேன். வொஷிங்டனிலுள்ள புதிய லிபரல்வாத முறைமையூடாக விசேட பொருளாதார விருத்தியை நெருங்கும் இயலுமை குறித்து பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது
என மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி W.D. லக்‌ஷ்மன் குறிப்பிட்டுள்ளார். கேள்வி - பொருளாதார அபிவிருத்தி வேகம் 2.7 ஆகக் காணப்பட்டது. அவ்வாறாயின் மூன்று வீதத்தை அடைய முடியுமா? 2019ஆம் ஆண்டில் 2.7 - 2.8 என்ற நிலை காணப்படும் என நாம் எதிர்பார்த்தோம். 2020ஆம் ஆண்டில் 4.5 ஐ அடைவதே எமது இலக்கு. நடுப்பகுதியில் 6.5 வீதத்தை அடைய முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொருத்தமான கொள்கைகள் ஊடாக 6.5 வீத விருத்தியை அடைய முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இது இடம்பெறுமா என்பதை எதிர்காலத்திலேயே பார்க்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், கலாநிதி சீ. அமரசேகர கூறியுள்ளார். கேள்வி - டொக்டர் வீரசிங்க, பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கப்ரால், மத்திய வங்கி அதிகாரிகளுக்கு இடையில் கடந்த 24ஆம் திகதி கலந்துரையாடலொன்று நடைபெற்றது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் பேசப்பட்டதாக அறிய முடிகிறது. அவ்வாறான விடயம் கலந்துரையாடப்பட்டதா?
அவ்வாறான விடயம் அங்கு கலந்துரையாடப்படவில்லை. அந்தக் கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கடனை அறவிடும்போது, ஏதேனுமொரு வகையில் சலுகையை வழங்க முடியுமா என பேசப்பட்டது. மத்திய வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினரொருவரின் கீழ், உப குழுவை நியமித்து, பங்குதாரர்களுடன் கலந்துரையாடி வேலைத்திட்டமொன்றை தயாரித்துள்ளோம். அது தொடர்பில் சில கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. வங்கிகளைச் ​சேர்ந்தவர்கள் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர். அரசாங்கம் சார்பில் ஆராய்ந்து இறுதியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமாயின் அதனை மேற்கொள்ளும் பொறுப்பு, நிதி அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்கப்பட்டது. அடுத்த வாரமளவில் அதனை நிறைவுக்குக் கொண்டுவர முடியும் என நான் நினைக்கின்றேன். அது அவ்வாறான நிலையிலேயே உள்ளது
என இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க பதிலளித்துள்ளார். கேள்வி - அனைத்து எஸ்.எம்.ஈ கடன்களை வழங்குவதை நிறுத்துமாறு, வங்கிகளின் தலைவர்களுக்கும் நிறைவேற்று அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறதே? பதில் - இல்லை. செலுத்துவதை இடைநிறுத்துமாறு கூறவில்லை. கேள்வி - அனைத்து எஸ்.எம்.ஈ கடன்களையும் இடைநிறுத்துமாறு இதில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் ஜனாதிபதியால் அவ்வாறு அறிவுறுத்தல் வழங்க முடியுமா? பதில் - இல்லை. அதாவது வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க முடியும். அதற்கான நடவடிக்கைகளையே நாம் தற்போது முன்னெடுத்துச் செல்கின்றோம். கேள்வி - அடுத்த வருடத்தில் எவ்வளவு தொகை வௌிநாட்டுக் கடன் செலுத்தப்பட வேண்டியுள்ளது? அவற்றை செலுத்துவதற்கான திட்டம் என்ன? பதில் - 4.8 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக நான் நினைக்கின்றேன். அவற்றை செலுத்துவதற்கான திட்டத்தை உண்மையில் அரசாங்கம் தீர்மானிக்கும். வணிகக் கடன் பெற வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்படும். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களில் சலுகைக் கடன் பெற வேண்டியேற்படும். எவ்வாறாயினும், வருடமொன்றுக்கு 1.5 பில்லியன் ரூபா, திட்டங்களுக்காக வழங்கப்படும். ஏனைய முறைமைகளான அபிவிருத்தி முறிகள், சமுராய் பிணை போன்றவையூடாகவும் நிதியைப் பெற முடியும். அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்து நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும். அடுத்த வருடம் ஒக்டோபர் மாதத்திலேயே அதிக கடன் தவணையை செலுத்த வேண்டியுள்ளது என்பது முக்கியமான விடயமாகும். அடுத்த வருடத்தின் முதல் மாதங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய கடன் தொகை தற்போது எம்மிடமுள்ளது.