அர்ஜுன மகேந்திரன் சில வாரங்களில் நாட்டிற்கு...  

அர்ஜுன மகேந்திரன் சில வாரங்களுக்குள் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக திலங்க சுமதிபால தெரிவிப்பு

by Staff Writer 27-12-2019 | 2:52 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சில வாரங்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இயலுமை காணப்படுவதாக தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம் உயர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும்போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு நாடுகடத்துவதற்குத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சட்ட நடவடிக்கைகள் நிறைவுபெற்றதும், உடனடியாக அவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதான சந்தேகநபரான அர்ஜுன மகேந்திரன் நாட்டிற்கு வரவழைக்கப்படும் வரை முறிகள் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு சிக்கல் காணப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால சுட்டிக்காட்டியுள்ளார். அர்ஜுன் மகேந்தின் நாடு திரும்பியதும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் அதன்பின்னர் முறிகள் மோசடியுடன் தொடர்புடைய மேலும் சிலர் குறித்து தெரியவரும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால சுட்டிக்காட்டியுள்ளார்.