ஜனாதிபதியிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதியிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

by Staff Writer 26-12-2019 | 6:55 PM
Colombo (News 1st) நாட்டில் வாழும் இரு மொழிகளைப் பேசும் இனத்தவர்களையும் இலங்கையர்களாக ஒன்று சேர்ப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய கீதம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மனோ கணேசன் அனுப்பியுள்ள கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தாய்நாட்டை எமது தாய் மொழியில் போற்றும் தேசிய கீதத்தை அகற்ற வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக மனோ கணேசன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வின் ‘அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக தான் செயற்படுவேன்’ என நாட்டுக்கு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை அகற்றும் இந்த முடிவை இரத்து செய்ய துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு அவர் ஜனாபதியை கேட்டுக்கொண்டுள்ளார். 3 மொழிகளையும் பேசி, எழுதி, தேசிய மொழிகள் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார். “ஒரே நாடு, மூன்று மொழிகள்” என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்றுசேர்த்து, தமிழ், சிங்கள, முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளைத் தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என ஜனாதிபதியிடம் வேண்டியுள்ளதாக இந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.