ஆப்கானில் உள்நாட்டு சமாதான செயற்பாட்டாளர்கள் கைது

ஆப்கானில் உள்நாட்டு சமாதான செயற்பாட்டாளர்கள் கைது

by Staff Writer 25-12-2019 | 7:33 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு சமாதான செயற்பாட்டாளர்கள் 27 பேர் தலிபான்களால் கடத்தப்பட்டுள்ளனர். ஆப்கானின் மேற்கு பாரா (Farah) மாகாணத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் சமாதான செயற்பாட்டாளர்கள் 6 கார்களில் பயணித்த நிலையில் கடத்தப்பட்டுள்ளதாக பாரா மாகாணத்தின் பிரதி ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆப்கானில் இடம்பெறும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் சமாதான பிரசாரங்களை மேற்கொள்வதற்காக சமாதான செயற்பாட்டாளர்கள் குறித்த பகுதியில் பயணித்ததாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த வருடம் நடத்தப்பட்ட கார் குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் உயிரிழந்ததுடன் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து, குறித்த சமாதான செயற்பாட்டாளர்களால் அமைதியை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அரச படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் 2001 ஆம் ஆண்டு முதல் மோதல் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ள பல பகுதிகளுக்கும் கடந்த வருடம் சென்று போர் நிறுத்த பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், ஆப்கான் அரசாங்கத்தினால் சமாதான செயற்பாட்டாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதாக தலிபான்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை சமாதான செயற்பாட்டாளர்கள் குழு மறுத்தமை சுட்டிக்காட்டத்தக்கது. ஆப்கானில் 2001 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுவரும் உள்நாட்டு மோதல்களினால் இதுவரை 10,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள், அமெரிக்காவின் மற்றும் ஆப்கானின் 2,400 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.