ராஜித சேனாரத்னவின் வீடுகளில் CID தேடுதல்

ராஜித சேனாரத்னவின் வீடுகளில் CID தேடுதல்

ராஜித சேனாரத்னவின் வீடுகளில் CID தேடுதல்

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2019 | 10:12 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்காக, கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (24) மாலை பிடியாணை உத்தரவு பிறப்பித்தமையானது அரசியல் மேடைகளின் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய நேற்று மாலை இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

நவம்பர் 10ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வௌ்ளை வேன் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்தமை ராஜித சேனாரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பிலுள்ள அவரின் வீட்டில் இருந்ததுடன், நேற்றிரவு முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் அங்கு சென்ற வண்ணமிருந்தனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, இன்று பிற்பகல் 1.15 மணியளவில் கொழும்பிலுள்ள அவரின் இல்லத்திற்குச் சென்றிருந்தனர்.

சுமார் 20 நிமிடங்களின் பின்னர் அவர்கள் அங்கிருந்து வௌியேறிச் சென்றதுடன், அந்த சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்ன வீட்டில் இருக்கவில்லை என தகவல் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ராஜித சேனாரத்னவுக்கு சொந்தமான பேருவளை – ஹெட்டிமுல்ல பிரதேசத்திலுள்ள வீட்டையும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று மாலை சோதனையிட்டுள்ளனர்.

இந்த சோதனையின்போது வீட்டிலிருந்த காவலாளியிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்