பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு பிணை

by Staff Writer 24-12-2019 | 2:37 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு இன்று (24) பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் முன்னாள் அமைச்சர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இன்று முற்பகல் விசேட பாதுகாப்புடன் சிறைச்சாலையில் இருந்து சிறைச்சாலை வேனில் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சார்பில் கடந்த 19 ஆம் திகதி சமர்பிக்கப்பட்ட பிணை கோரிக்கை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிணை சட்டத்தின் அடிப்படை சரத்துக்கு அமைய, பிணை வழங்க முடியாதளவிற்கு தௌிவான விடயமொன்றை காண முடியவில்லை என முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்ஜனா டி சில்வா குறிப்பிட்டார். எனினும், அந்த விடயங்கள் குறித்து தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார். பெற்றோலிய வள அமைச்சின் வாகனமொன்றையும் மின்சக்தி அமைச்சின் வாகனமொன்றையும் பயன்படுத்தியுள்ளமையும் 10 மாதங்களின் பின்னர் அதனை கையளித்துள்ளமை தொடர்பிலும் ஆராய வேண்டும் எனவும் அவர் குறிப்பிடடுள்ளார். எனினும், அந்த விடயம் பிணை வழங்காமல் இருப்பதற்கான காரணம் அல்லவென, மேலதிக நீதவான் சுட்டிக்காட்டினார். ஒரு அமைச்சர் இரு அமைச்சுக்களில் பணியாற்றும் போது அவ்வாறு வாகனங்களை பயன்படுத்த முடியும் என பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் குறிப்பிட்டனர். இதேவேளை, இந்த வழக்கின் விசாரணையை பொது உடைமை சட்டத்தின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளாரா என இதன்போது மேலதிக நீதவான் கேள்வி எழுப்பினார். இதுவரையில் அது இடம்பெறவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பிரீஸ் பதிலளித்தார். இரு தரப்புக்களினதும் விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான், பாட்டலி சம்பிக்க ரணவக்க 25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரரப் பிணைகளிலும் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு இதன்போது நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், முறைப்பாட்டு தரப்பின் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் விடுக்கக்கூடாது எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதேவேளை, வழக்குடன் தொடர்புடைய விபத்து இடம்பெற்ற தினத்தில், வாகனத்தை செலுத்தியதாகக் கூறப்படும் சாரதியான திலும் துசித்த குமாரவை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரை எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார். அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டு தரப்பினரின் கோரிக்கையை ஆராய்ந்த மேலதிக நீதவான் எதிர்வரும் 26 ஆம் திகதி சிறைச்சாலையில் அதனை பெற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார். இந்த விசாரணைகளுக்காக பிரதீப் அல்விஸ் என்பவரிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என விடுத்த கோரிக்கைக்கு அமைய நாளை முற்பகல் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.