அடுத்த வருடத்திற்கான விளையாட்டுக் குழாம்கள் குறித்து விளையாட்டுத் துறை பணிப்பாளர் நாயகம்

by Staff Writer 24-12-2019 | 9:40 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுக் குழாம்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் பெயரிடப்படும் என விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல தெரிவித்துள்ளார். நேபாளத்தில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாம் 25 அதிகாரிகளையே அழைத்துச் சென்றோம். அமைச்சின் 2 அதிகாரிகளை அழைத்துச் சென்றோம். எமது திணைக்களத்தின் 12 அதிகாரிகளை அழைத்துச் சென்றோம். செல்லும் அதிகாரிகள் யாரென்பனை தீர்மானிப்பதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை அமைத்தார். அந்தக் குழுவின் ஊடாகவே இந்த அதிகாரிகளை பங்கேற்கச் செய்தால் சிறந்தது என தீர்மானிக்கப்பட்டது. கடந்த வாரம் நாம் நாடு திரும்பியவுடன் குலரத்னவை தலைவராக நியமித்தேன். அத்துடன் சுசந்திகா ஜயசிங்கவை அங்கத்தவராக நியமித்தோம். அவர்களுக்கு நாம் எமது விளையாட்டு குழாம்களின் பயிற்சிகளை ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்குமாறு பொறுப்பொன்றை வழங்கியுள்ளோம். அந்தக் குழாம்களுக்கு தகுதியான வீர, வீராங்கனைகளை அவர்கள் தெரிவுசெய்ய வேண்டும்
என விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் தரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை நான் முன்மொழிகிறேன். பெரும்பாலான சந்தர்ப்பத்தில் பெறுமதியுடன் சந்தைப்படுத்த முடியுமாக இருந்தாலே எம்மால் இந்த வெற்றிகளுடன் விளையாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும். விளையாட்டுச் சங்கங்களைப் பொறுத்தவரையில் அந்த விளையாட்டில் ஈடுபட்ட ஒருவர் தலைவராக வந்தால் சிறந்தது. மெய்வல்லுநர் போட்டிகளை எடுத்துக்கொண்டால் ஒருபோதும் மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்காத ஒருவர் தலைவராக வந்தால் சாப்பிட வேண்டும் என்று கூறினாலும், களைப்பாக இருக்கிறது என்று கூறினாலும் எதைச் சொன்னாலும் அவருக்கு புரியாது
என சுசந்திகா ஜயசிங்க இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.