by Staff Writer 23-12-2019 | 5:58 PM
Colombo (News 1st) வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ராஜித சேனாரத்ன இன்று (23) மூன்றாவது தடவையாகவும் முன்பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இந்த முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனுவை எதிர்வரும் 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்னவினால் கடந்த 19 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனுவை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன கடந்த 20 ஆம் திகதி நிராகரித்திருந்தார்.
தாம் கைது செய்யப்படுவது எந்தவகையில் தவறு என்பது குறித்து சரியாக குறிப்பிடவில்லை என அறிவித்தே குறித்த முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.