பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 23-12-2019 | 3:23 PM
Colombo (News1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இவர்களை ஆஜர்படுத்தியபோது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான வாக்குமூலங்களை பதிவுசெய்வது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான திகதியை இதுவரை அவர்கள் அறிவிக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அறிவித்துள்ளார். விரைவில் அவர்கள் தினம் வழங்காவிடின், அது தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து தேவையான கட்டளைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் மன்றில் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலேயே, ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.