தோல்விக்கான காரணத்தை வௌியிட்டார் திமுத் 

பாகிஸ்தானுடனான தோல்வி ; காரணத்தை வௌியிட்டார் திமுத் கருணாரத்ன

by Staff Writer 23-12-2019 | 7:47 PM
Colombo (News 1st) திறமையான சிரேஷ்ட வீரர்கள் பங்குபற்றாமையே பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடையக் காரணம் என இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை - பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போட்டியொன்றில் வெற்றிபெற ​வேண்டுமாயின் புதுமுக வீரர்களுடன் சிரேஷ்ட வீரர்களும் இணைந்து வெற்றியை நோக்கி பங்களிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார். தோல்வி குறித்த குற்றச்சாட்டுகளை தலைவர் என்ற ரீதியில் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 263 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது. கராச்சியில நடைபெற்ற இந்தப் போட்டியில் 476 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால், இரண்டாவது இன்னிங்சில் 212 ஓட்டங்களையே பெற முடிந்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களை பெற்றதுடன் இலங்கை அணி 271 ஓட்டங்களை குவித்தது. இதனையடுத்து இரண்டாம் இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட்களை இழந்து 555 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 0 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.