ஜனாதிபதி உரையின் பின் பாராளுமன்றம் கூட்டப்படும் 

ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் பின் பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம்

by Staff Writer 23-12-2019 | 4:14 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி காலை இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் பின்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1 மணி முதல் மாலை 6 மணிவரை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பதவிக்கான அதிகாரங்களுக்கு இணங்க எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி சபை அமர்வு ஆரம்பிக்கப்படும்போது எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற சபை முதல்வர் பதவி மற்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடா பதவி தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சபாநாயகர் அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை, இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்ட மற்றுமொரு முக்கிய விடயம் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எட்டாவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடரை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்படவுள்ளது. பாராளுமன்ற செயற்குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கும் இன்றைய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.