இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி

by Staff Writer 23-12-2019 | 4:10 PM
Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 263 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியது. கராச்சியில நடைபெற்ற போட்டியில் 476 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 212 ஓட்டங்களையே பெற முடிந்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களைப் பெற்றதுடன் இலங்கை அணி 271 ஓட்டங்களைக் குவித்தது. இதனையடுத்து, இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட்களை இழந்து 555 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. ஷான் மசூட் 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, அபிட் அலி 174 ஓட்டங்களைக் குவித்தார். அணித்தலைவர் அஸார் அலி 118 ஓட்டங்களையும் பாபர் அஸாம் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றனர். பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டிற்காக அபிட் அலி மற்றும் ஷான் மசூட் ஜோடி 278 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. பாகிஸ்தான் சார்பில் முதல் விக்கெட்டிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டமாகும். பாகிஸ்தான் அணியின் முதல் 4 வீரர்களும் சதங்களைப் பூர்த்திசெய்ததுடன், 142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த திறமையை வௌிப்படுத்திய இரண்டாவது அணியாக பாகிஸ்தான் பதிவாகியுள்ளது. 476 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றது. இன்றைய இறுதி நாளாட்டத்தில் எந்தவொரு ஓட்டத்தையேனும் பெறாது, இலங்கை அணி இறுதி 3 விக்கெட்களையும் இழந்தது. கன்னிச் சதத்தை பூர்த்திசெய்த ஓஷத பெர்னாண்டோ 102 ஓடடங்களை பெற்றதுடன் நிரோஷன் திக்வெல்ல 65 ஓட்டங்களை குவித்தார். பந்துவீச்சில் நசீம் ஷா 5 விக்கெட்களை வீழ்த்தியதுடன், டெஸ்ட் போட்டியொன்றில் 5 விக்கெட்களை வீழ்த்திய குறைந்த வயது வீரராக இவர் பதிவாகியுள்ளார்.