மழையுடனான வானிலையால் தொடர்ந்தும் பாதிப்புகள்

மழையுடனான வானிலையால் தொடர்ந்தும் பாதிப்புகள்

மழையுடனான வானிலையால் தொடர்ந்தும் பாதிப்புகள்

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2019 | 3:40 pm

Colobmo (News 1st) நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப் பகுதியில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 13 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 65,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

19,095 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 17,766 பேர் 132 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழையினால், பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, குருநாகல, புத்தளம், கேகாலை, அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலுவம் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

பொலன்னறுவை – சோமாவதி வீதியுடனான போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏ-9 வீதியில் மாத்தளை பகுதியில் ஒருவழி போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகள் வீதிகளில் வௌ்ளநீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில், பசறை – லுணுகல வீதி மற்றும் வெலிமடை – ரேந்தபொல, அம்பேவெல வீதியுடனான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான 43 நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்துள்ன.

பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 86 வீதத்தை அடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தின் கல நிலைமை தொடர்பான தகவல்களுடன் அங்கு சென்றுள்ள எமது அலுவலக செய்தியாளர் இரட்ணம் கோகுலன் இணைந்துக் கொள்கிறார்.

அதேநேரம், பலத்த மழையினால் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனகத்தின் புவிசரிதவியல் விசேட நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 14 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பதுளை, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, காலி, குருநாகல், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

15,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாய வலயத்தில் வாழ்ந்துவருவதாக நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வௌ்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இராஜாங்கனை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

மழை காரணமாக சுமார் 112 பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு 170 இலட்சம் ரூபா நிதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ரஜபக்ஸவுடன் இடர்முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் அடுத்தகட்டம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடிவருவதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வட மாகாணம் மற்றும் திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று 100-150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை – அம்பாறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வானிலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்