தொடர் மழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

தொடர் மழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

by Staff Writer 21-12-2019 | 2:49 PM
Colombo (News 1st) நாட்டின் 12 மாவட்டங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 2062 குடும்பங்களைச் சேர்ந்த 7025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இருவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 3875 பேர் 37 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மட்டக்களப்பு செங்கலடி பகுதியிலுள்ள விவசாய கிராமங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்கு மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மழை வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பலத்த மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குட்பட்ட 75 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 82 வீதமாக உயர்வடைந்துள்ளது. 42 நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கும்புக்கன் ஓயா பெருக்கெடுத்துள்ளமையால் நக்கல பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் சேருவில, மூதூர், கிண்ணியா, லங்காபுரம் உள்ளிட்ட மகாவலி ஆற்றை அண்மித்து வாழும் பகுதிகளில் உள்ளவர்கள் மிகுந்த அவதாகத்துடன் செயற்பட வேண்டும் என இடர்முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. பொலன்னறுவை - மன்னப்பிட்டிய பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பஸ் ஒன்றில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணிகளின்போது பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். 40 பயணிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.