ராஜித சேனாரத்ன மீண்டும் முன்பிணை மனு தாக்கல்

by Staff Writer 20-12-2019 | 7:16 PM
Colombo (News 1st) வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ராஜித சேனாரத்ன, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட முன்பிணை மனுவை மீண்டும் தாக்கல் செய்துள்ளார். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுக்கும் விசாரணையின் மத்தியில் பிணை வழங்கமுடியாத குற்றச்சாட்டு தொடர்பில் தம்மைக் கைது செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ராஜித சேனாரத்ன மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனினும், எந்தக் குற்றத்திற்காக தம்மைக் கைது செய்வார்கள் என்பது தொடர்பில் மனுதாரர், முன்பிணை மனுவில் குறிப்பிடவில்லை என தெரிவித்த பிரதம நீதவான் மனுவை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட முன்பிணை மனுவை மீண்டும் தாக்கல் செய்துள்ளார். பிணைச் சட்டத்தின் 21ஆவது சரத்துக்கிணங்க பிணை மனுவொன்றை தாக்கல் செய்பவர் எந்தக் குற்றத்துக்காக பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதைத் தௌிவாக குறிப்பிட வேண்டும் என நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.