நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மீண்டும் கடும் மழை

by Staff Writer 20-12-2019 | 3:22 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று (20) பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, கிழக்கு, ஊவா, வட மேல் மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சியாக மொனராகலையில் 94 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையால் பல வீதிகளும் தாழ்நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், சுங்காவில - பொலன்னறுவை வீதி நீரில் மூழ்கியதால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. தியதலாவ - பண்டாரவளை பகுதிகளுக்கு இடையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் மலையக மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மண்ணை அகற்றும் வரை கொழும்பு கோட்டையிலிருந்து பயணிக்கும் ரயில்கள், தியத்தலாவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மாத்தளை - குருநாகல் பிரதான வீதியின் பல பகுதிகளில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதுடன், மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கண்டி உடுதும்பர மீ முரே பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுளளது. இதனால், மாற்றுவீதியாக உடுதும்பர தோரப்பிட்டிய வீதியைப் பயன்படுத்துமாறு கண்டி மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு காரணமாக உடுதும்பர பகுதியை சேர்ந்த 15 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பலத்த மழையுடனான வானிலையால் 26 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தலாவ, இபலோகம, தம்புத்தேக, மற்றும் கல்நேவ பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தின் இராஜாங்கனை, நுவரவெவ, நாச்சாதூவ உள்ளிட்ட 7 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தின் இங்கினிமிட்டி மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், தெதுருஓயாவின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் ரூகம் நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தளை, கண்டி, நுவரெலியா, மொனராகலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல - பல்லேகம பிரதேச செயலாளர் பிரிவிற்குபட்ட பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ, யட்டவத்த, மாத்தளை, நாவுல ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதனைத் தவிர மாத்தளை மாவட்டத்தின் இரத்தொட்ட மற்றும் அம்பகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் நுவரெலியாவின் ஹங்குரங்கெத்த பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ட பகுதிகளுக்கும் பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம, எல்ல, வெலிமட, ஹல்தமுல்ல, பசறை, லுணுகல, ஹாலிஎல, பண்டாரவளை, பதுளை, ஹப்புத்தளை, பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ட பகுதிகளுக்கும் மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர, பிபில ஆகிய பகுதிகளுக்கு முதல்நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிறுவகம் குறிப்பிட்டுள்ளது. மண்சரிவிற்கான ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் கோரிக்கை விடுத்துள்ளது.