சுவிஸ் அதிகாரியின் தொலைபேசியை ஒப்படைக்க உத்தரவு

சுவிஸ் தூதரக அதிகாரியின் கையடக்கத் தொலைபேசி, சிம் அட்டையை ஒப்படைக்குமாறு உத்தரவு

by Staff Writer 19-12-2019 | 7:49 PM
Colombo (News 1st) சுவிஸ் தூதரக பெண் அதிகாரியான கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் மற்றும் அவருடைய கணவரின் கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸிடம் மேலதிக விசாரணைகளுக்குத் தேவையான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கான வசதிகளை ஒழுங்குபடுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனத்தை வாடகைக்கு வழங்கிய நிறுவனம் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என அந்நிறுவனத்தின் முகாமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்ட சிம் அட்டைகள் மற்றும் தொடர்பாடல் விடயங்கள் குறித்து பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று மீண்டும் அங்கொடை தேசிய உளநல மருத்துவ சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அங்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் சுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.