குசும்தாசவும் பியதாசவும் குற்றவாளிகள் என நிரூபணம்

குசும்தாச மஹானாமவும் பியதாச திசாநாயக்கவும் குற்றவாளிகள் என நிரூபணம்

by Staff Writer 19-12-2019 | 4:42 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி அலுவலக தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்க ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளது. மேல் மாகாண மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் இவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான கட்டடம் மற்றும் இரும்புகளை தனியார் ஒருவருக்கு கைமாற்றுவதற்கு அனுமதி வழங்கியதனூடாக சீனி நிறுவனத்தின் தலைவரிடம் 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன. இலங்கை சீனி நிறுவனத்தின் தலைவர் தம்பையா நடராஜாவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டிற்கு அமைய, இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இலஞ்ச பணத்தை பெறும் போதே, கலாநிதி குசும்தாச மஹானாம மற்றும் பியதாச திசாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.