பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2019 | 3:28 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு பிணை வழங்க சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆட்சேபனை தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி இரவு இராஜகிரிய பகுதியில் இளைஞர் ஒருவரை விபத்திற்குள்ளாக்கிய போது, வாகனத்தை செலுத்தியது அவரது சாரதி இல்லை என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே குறித்த வாகனத்தை செலுத்தியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சட்ட மா அதிபரின் ஆட்சேபனை காரணமாக இன்று பிணை வழங்க முடியாது என அறிவித்த நீதவான், இந்த பிணை கோரிக்கை தொடர்பான கட்டளை எதிர்வரும் 24 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.

சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்