MCC உடன்படிக்கையும் அரசின் இருவேறு நிலைப்பாடும்

MCC உடன்படிக்கையும் அரசின் இருவேறு நிலைப்பாடும்

by Bella Dalima 18-12-2019 | 8:31 PM
Colombo (News 1st) தற்போதைய அரசாங்கம் MCC உடன்படிக்கை மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பில் செயற்படும் விதம் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. MCC உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தொடர்ந்தும் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளனர். அமெரிக்காவின் Millennium Challenge Corporation நிறுவனத்திடம் இருந்து 480 மில்லியன் டொலர் நன்கொடையை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இணக்கப்பாட்டை ஆராய்ந்து வருவதாக அரசாங்கம் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கூறி வருகின்றது. காணி தொடர்பிலான சட்ட மறுசீரமைப்பு, காணி உரிமை மற்றும் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தல் போன்ற விடயங்களுக்காக இந்த தொகையை வழங்குவதாக MCC நிறுவனம் தெரிவித்தது. இதேவேளை, வெளிநாட்டு அமைப்புகளுக்கு தேவையான விதத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்த முடியாது என நேற்று (17) மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். உள்நாட்டு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பொருளாதார முன்னெடுப்புகள் அமைய வேண்டுமே தவிர, உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச நாணய நிதியம் அல்லது உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு அமையக்கூடாது என விமல் வீரவன்ச வலியுறுத்தினார். கடந்த அரசாங்கக் காலத்தில் வீழ்ச்சியடைந்த உள்நாட்டு தொழிற்துறையையும் பொருளாதாரத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு கூறினாலும், இலங்கைக்கு 25 மில்லியன் கடன் வழங்கவுள்ளதாக உலக வங்கி இன்று அறிவித்தது. நாட்டின் அரச நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் வௌிப்படைத்தன்மையை ஏற்படுத்தலுக்கான 5 வருட திட்டத்தில் முதலீடு செய்ய கடன் வழங்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அரச நிதி முகாமைத்துவ நடவடிக்கைகளின் நம்பகத்தன்மை மற்றும் செயற்திறனை மேம்படுத்துவது இதன் நோக்கம் எனவும் 25 மில்லியன் டொலரை 28 வருடங்களில் மீள செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று இலங்கைக்கான சீன தூதுவர் Cheng Xueyuan உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து நாட்டில் முன்னெடுக்கப்படும் சீன திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து முன்னெடுக்க முடியுமான திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை இன்று சந்தித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் கடனை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இதேவேளை, MCC உடன்படிக்கையை செயற்படுத்தும் நிலைமை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.