பிரகீத் எக்னலிகொட: பெப்ரவரி 20ஆம் திகதி விசாரணை

பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணையை பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்

by Staff Writer 18-12-2019 | 4:51 PM
Colombo (News 1st)  கிரித்தலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன்ட் கேர்னல் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவின் 9 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை இரகசியமாக தடுத்து வைக்கும் நோக்கில் கடத்திச்சென்றமை மற்றும் அவரை கொலை செய்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கின் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ள சந்தியா எக்னலிகொட, ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன, முரளி என அழைக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினரான சுரேஷ் குமார் ஆகிய மூன்று பேரையும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுப்பதற்கும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் 7 ஆவது பிரதிவாதியான ஐயாசாமி பாலசுப்ரமணியத்தை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுவதற்கும் சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் செயற்படாவிடின் வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்க நேரிடும் என வழக்கின் 7 ஆவது பிரதிவாதிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.