நாமல் குமாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

நாமல் குமாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

by Staff Writer 18-12-2019 | 7:33 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் தகவல்களை அம்பலப்படுத்தியதன் காரணமாக ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் என கூறப்படும் நாமல் குமார என்பவர் தொடர்பில் பரவலாக பேசப்பட்டது. ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஹெட்டிப்பொல நகரில் அமைதியின்மையைத் தோற்றுவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நாமல் குமார கடந்த மே மாதம் 14 ஆம் திகதி வரக்காப்பொல பகுதியில் கைது செய்யப்பட்டார். சுமார் 7 மாதங்கள் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நாமல் குமார கடந்த 10 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாமல் குமார இன்று மீண்டும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, நாமல் குமாரவிற்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து, நீதவானும் பிணை கோரிக்கையை நிராகரித்தார். சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.