தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இணக்கம்

தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இணக்கம்

by Staff Writer 18-12-2019 | 3:30 PM
Colombo (News 1st) தேர்தலை முன்னிட்டு செலுத்தப்படும் கட்டுப்பணத் தொகையை அதிகரித்தல், பிரசார நடவடிக்கைகளுக்கான செலவுகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பிலான சில சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (17) பேச்சுவார்த்தை நடைபெற்றது. சட்ட மா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் சிலரும் நேற்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர். சுகாதாரம், துறைமுகம் மற்றும் விமான நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையில், சட்டத்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் நேற்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், குறித்த திருத்தங்களை ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.